தேவகோட்டை நகராட்சியில் மக்களைத் தேடி முகாம்கள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் மக்களைத்தேடி சிறப்பு முகாம்கள் 27 வார்டுகளிலும் நடைபெற உள்ளன.
இந்த புதிய முயற்சியை நகர்மன்றத் தலைவி சுமித்ரா ரவிக்குமார், ஆணையாளர் சரவணன் ஆகியோர் அறிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரின் மக்கள்குறை தீர்க்கும் முகாம் போல் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியின் 1,2,3 வார்டுகளுக்கு ஜூன் 8ஆம் தேதி ராமநகர் புனித ஜோசப் நடுநிலைப்பள்ளியிலும், 4 முதல் 11 வார்டுகளில் ஜூன் 22ஆம் தேதி கண்டதேவி சாலை சேவுகன் மழலையர் பள்ளியிலும், 12 முதல் 15ஆவது வார்டுகள் வரை ஜூலை 13ஆம் தேதி அரசு மருத்துவமனை அருகில் உள்ள 16ஆவது தொகுதி நகராட்சி பள்ளியிலும், 16, 17, 18, 19, 27, 28 வார்டுகளுக்கு ஜூலை 27ஆம் தேதி காந்தி வீதி 6ஆவது தொகுதி நகராட்சி பள்ளியிலும், 20 முதல் 24ஆவது வார்டுகள் வரை ஆகஸ்ட் 10ஆம் தேதி முகமதியர் பட்டிணம் நகராட்சி திருமண மண்டபத்திலும் இந்த முகாம்கள் நடைபெறும். இதில் நகராட்சியின் அனைத்து பிரிவு ஊழியர்களும் கலந்துகொள்வர்.
முகாமில் சொத்து வரி விதிப்பு, பெயர் மாற்றம் மற்றும் திருத்தம், குடிநீர் கட்டணம், தொடர்பான முறையீடுகள், கட்டட வரைபட அனுமதி, தொழில் வரி, தெருவிளக்கு, வாருகால் எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பிரச்னை தொடர்பான மனுக்களும் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்படும்.
இந்த முகாமில் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு நகராட்சி ஆணையாளர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஏனைய அலுவலக நாள்களிலும் வழக்கம்போல் அனைத்துப் பிரிவுகளிலும் பொதுமக்கள் குறைகளை கூறி நிவர்த்தி செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.