தினமலர் 01.06.2010
நகராட்சி இடம் தனியாருக்கு தாரைவார்ப்பு? பட்டுக்கோட்டை கவுன்சிலர்கள் போர்க்கொடியால் ஒத்திவைப்பு
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சியின் சாதாரண, அவசரக் கூட்டம் தலைவர் பிரியா இளங்கோ (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் கண்ணன், ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கூட்ட விவாதம் வருமாறு:மனோகரன் ம.தி.மு.க.,: நகராட்சியில் முன்னாள் தலைவர் சீனி பன்னீர்செல்வத்துக்கு சிலை அமைப்பதில் ஆட்சேபமில்லை. அத்துடன் மறைந்த முன்னாள் தலைவர் விசுவநாதனுக்கும் சிலை அமைக்க வேண்டும்.
ரகுராமன் தி.மு.க.: இலவச காஸ், இலவச “டிவி‘ வழங்கியதற்கு நன்றி. பத்து லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்ததற்கும், ஐந்து லட்சம் நிதி வழங்கிய எம்.எல்.ஏ., ரெங்கராஜனுக்கும் நன்றி. மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை போன்றவற்றை எதிர்த்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டும் அதை முறையாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பாதது ஏன்?பட்டுக்கோட்டையில் தனியார் கல்லூரி அபகரித்துள்ள நகராட்சி இடத்தை தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 58 ரூபாய்க்கு விற்கும் முன் கடந்த ஐந்து நகராட்சி நிர்வாகங்கள் செய்யாத செயலை நீங்கள் செய்து அழியா கலங்கத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
திருச்செந்தில் சுயே.,: எங்களது வார்டில் ரயில்வே கேட் அமைக்க விடுத்த கோரிக்கையை அஜண்டாவில் சேர்த்தமைக்கு நன்றி. 37 ஏக்கர் 93 சென்ட் இடத்தை நகராட்சி குடிநீர் மற்றும் அதன் பயன்பாட்டுக்காக தனியார்களிடம் இருந்து கையகப்படுத்தி, அவ்விடத்தை ஒரு தனியார் கல்லூரிக்கு மிக குறைந்த விலைக்கு தாரைவார்ப்பதை ஏற்க முடியாது. அவ்விடத்தை அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு சென்டாக வழங்கினால் கூட ஆயிரம் பேர் பயனடைவர். நகரில் ஓர் சமத்துவபுரத்தை கட்டலாம். நகராட்சி இடத்தை மிக குறைந்த விலைக்கு வழங்க எனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
சகுந்தலா தி.மு.க.,: கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே நான் கூறினேன். நகராட்சி இடத்தை வியாபார நோக்கோடு செயல்படும் தனியார் கல்லூரி அபகரிக்க நினைக்கிறது என்று. இப்போது எந்த அடிப்படையில் பல கோடி மதிப்புள்ள நகராட்சி இடத்தை அவர்களுக்கு வழங்க முடியும். இன்று பட்டுக்கோட்டையில் இடத்தின் மதிப்பு என்ன? நீங்கள் நிர்ணயித்துள்ள தொகை எவ்வளவு? இதை நான் எதிர்க்கிறேன்.
கைலாஷ்குமார் தி.மு.க.,: நகராட்சி இடத்தை குறிப்பிட்ட விலைக்கு வழங்க நகராட்சி முடிவு செய்யலாம் என்ற வார்த்தையை ஏன் அஜண்டாவில் சேர்க்கவில்லை. நகராட்சி என்றால் ஆணையர் அல்ல. அதன் கவுன்சிலர்களாகிய நாங்கள் தான் பொறுப்பு. அது ஆணையருக்கு தெரியுமா?
ஆணையர்: அரசு ஆணை என்றால் புரிந்து கொள்ள வேண்டும். அதில் “க்‘ இருக்கிறதா?, “ட்‘ இருக்கிறதா என ஆராய முடியாது. நீங்களே முடிவு செய்து அறிவியுங்கள்.
சீதாலெட்சுமி அ.தி.மு.க.,: எனது வார்டில் உள்ள நகராட்சி இடத்தை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மார்க்கெட் விலையை விட மிக குறைவாக விற்று, நகராட்சி இழப்பீடு ஏற்படுவதை கண்டித்து இத்தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கின்றேன்.
ஸ்ரீதர் தி.மு.க.,: கடந்த 2007ம் ஆண்டு எட்டாவது மாதம் நடந்த கூட்டத்தில் புள்ளி விபரங்களுடன் தனியார் கல்லூரி அபகரிக்க நினைக்கும் நிலத்தின் மதிப்பு பற்றி தெரிவித்தேன். இன்று பல கோடி மதிப்புள்ள அந்த இடத்தை குழி வெறும் 105 ரூபாய் என மதிப்பீடு செய்து அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த இடம் பற்றிய வழக்கு வேறு நிலுவையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டம் முடிந்து பேசிய நகராட்சி தலைவர், “”பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி இடம் வழங்குவது பற்றிய தீர்மானம் தவிர மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது,” என்றார்.