தினமணி 22.03.2010
நகராட்சி, ஊராட்சிப் பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்
உதகை,மார்ச் 21: தமிழகத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டுமென, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மையச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் கே.கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ராஜா சுப்பிரமணியன், வெ.சீனிவாசன், உதயகுமார், தமிழ்மணி, மகாலிங்கம், வெங்கடேசலு, காமராஜ், ஆறுமுகம், சுந்தரமூர்த்தி, முனியாண்டி, காந்திமதி, பிரேமகுமாரி, ஈஸ்வரி, முருகன், ரங்கராஜ் ஆகியோருடன் அனைத்து மாவட்டத் தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மையச் சங்கத்தின் 21-வது மாநில மாநாடு சென்னையில் ஜூன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடத்தப்படும்.
இம் மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மற்றும் அமைச்சர்களோடு அகில இந்திய நான்காவது பிரிவு சங்கத் தலைவர்கள் மற்றும் தோழமை சங்கத் தலைவர்களை அழைக்க வேண்டும்.
தமிழக அரசில் அனைத்துத் துறைகளிலும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் ஆட்குறைப்பு அரசாணையால் பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்து, 6 அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒரு அலுவலக உதவியாளர் என்ற வகையில் பணியிடம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசில் அனைத்துத் துறைகளிலும் காலியாகவுள்ள டி பிரிவு பணியிடங்களில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பகுதிநேரப் பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பண்ணை பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் மற்றும் கல்வித்தகுதியுள்ள அனைவருக்கும் இளநிலை உதவியாளர் பதவிகளை வழங்க வேண்டும்.
தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து டி பிரிவு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக இருக்கும்போது தோட்டக்கலைத்துறையில் டான்ஹோடாவில் பணியாற்றும பண்ணைப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது மட்டும் 58 என நிர்ணயித்து ஓய்வு வழங்குவதை உடனடியாக நிறுத்தி, மற்றவர்களைப் போலவே 60 வயதாக நிர்ணயிக்க வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷன் பரிந்துரையை ஏற்று முரண்பாடுகளை களைய விரைவில் அரசாணை வெளியிட வேண்டும். தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் மேனிலைப் பணியாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள அரசு நிலம் ஒதுக்கியதைப்போல, அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கும் குறைந்த விலையில் நிலம் ஒதுக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம், கருணைத்தொகை வழங்க வேண்டும்.
மலைப்பகுதிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வெப்பாடை முன்பணம் மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு வழங்குவதைப்போல பண்ணை பணியாளர்களுக்கு மலைப்படி வழங்க வேண்டும்.
தமிழக அரசில் கடைசி நிலையில் பணிபுரியும் டி பிரிவு பணியாளர்கள் அனைவருக்கும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசில் பணியாற்றும் நகராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றியங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் கல்வித் தகுதியுள்ள அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்களில் 20 சதத்தினருக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன்குமார் செய்திருந்தனர். முன்னதாக, மாநில பொதுச்செயலர் சண்முகம் வரவேற்றார். மாநில பொருளாளர் கோதண்டபாணி நன்றி கூறினார்.