தினமலர் 01.06.2010
நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கண்டனம்
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி கூட்டத்தில் கலந்துக் கொள்ளாத அதிகாரிகளுக்கு கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
திண்டிவனம் நகர மன்ற கூட்டம் சேர்மன் பூபாலன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் கவிதா முரளிதரன், அலுவலர்கள் மற்றும் கவுன் சிலர்கள் கலந்துக் கொண்டனர்.கூட்டத்தில் பா.ம.க.,கவுன்சிலர் முரளிதாஸ் பேசுகையில், தன்னார்வ தொண்டு நிறுவனம், நகராட்சி உரக்கிடங்கில் உரம் தயாரிக்கவும், ஓராண்டு குப்பைகளை வழங்கவும் கொண்டு வந்த தீர்மானம் சென்ற முறை ஏன் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது எப்படி அனுமதி வழங்கப்படுகிறது என்றார்.சென்ற முறை விளக்கமாக தீர்மானம் இல்லை. இப்போது விளக்கமாக உள்ளதால் அனுமதிக்கலாம் என சேர்மன் பூபாலன் கூறினார்.
இதையடுத்து ஜெயராஜ்,முரளிதாஸ்(பா.ம.க.) ஆகியோர் பேசுகையில், கவுன்சிலர்கள் நேரில் சென்று பார்த்தப் பின்பு தீர்மானத்தை நிறைவேற்ற லாம் என்று கூறியதை சேர்மன் ஏற்றுக் கொண்டார்.பூபால்(வி.சி.) பேசுகையில், என் வார்டில் 15 விளக்குகள் எரியவில்லை. குடிசை மாற்று திட்டம் வருமா. வராதா? இதற்கெல்லாம் பதில் கூற வேண்டிய கமிஷனர் , இன்ஜினியர் கூட்டத்திற்கே வரவில்லை என்றார்.நகர மன்ற கூட்டத்திற்கு கமிஷனர், இன்ஜினியர் வருவதே இல்லை. ஆணையரை காணவில்லை என்று பத்திரிகையில் தான் விளம்பரம் கொடுக்க வேண்டும் என சேர்மன் பூபாலன் கூறினார்.அதிகாரிகள் கூட்டத்திற்கு வராதற்கு கண்டனத் தீர்மானம் போட வேண்டும் என கவுன்சிலர்கள் முரளிதாஸ், வடபழனி கூறினர்.
கூட்டத்தில் பா.ம.க.,கவுன்சிலர் சவுந்தர், முன்னாள் நகர மன்றத் தலைவர் ஈராசந்திற்கு நகராட்சியில் உருவ சிலை அமைக்க வேண்டும். நகர மன்ற கூட்டத்தில் படம் திறக்க வேண்டுமென கொடுத்த தீர்மானத்தை சேர்மன் ஏற்றுக் கொண்டார். பின்பு சேர்மனிடம் பா.ம.க., கவுன் சிலர்கள், மன்றக் கூட்டத்திற்கு வராத கமிஷனர், இன்ஜினியர் மீது கண்டன தீர்மானம் கொடுத்தனர்.