தினமணி 30.04.2010
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் விடுப்பு போராட்டம் வாபஸ்
புதுச்சேரி, ஏப்.29: புதுவையில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இத்தகவலை புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ம.ஜோசப் அன்ந்துவான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியது: புதுவையில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழுவின் புதிய ஊதிய விகிதங்கள் வழங்கியதில் நிலுவைத் தொகையில் ஏற்கெனவே 40 சதவீத நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 60 சதவீத நிலுவைத் தொகை அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவிட்ட பின்னரும் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
இந்த 60 சதவீத நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எங்கள் சங்கங்களின் சம்மேளனம் ஏப்ரல் 19-ம் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 27-ம் தேதி 60 சதவீத நிலுவைத் தொகையை வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதர கோரிக்கைகள் குறித்து மே 7-ம் தேதி துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேசுவது என, 28-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தொடர் விடுப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்றார் அவர்.