தினமணி 22.02.2010
நகராட்சி சொத்துவரியை செலுத்துவதில்லை: அரக்கோணம் வணிகர் சங்கம் முடிவு
அரக்கோணம், பிப் 21:அரக்கோணம் நகராட்சியில் சொத்துவரி நூறு சதவீதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சொத்துவரியை தாற்காலிகமாக செலுத்துவதில்லை என அரக்கோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் கே.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார். செயலர் சுப்பிரமணி, நகர மளிகை வியாபாரிகள் சங்கச் செயலர் அசோகன், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கஜேந்திரன், ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் இளங்கோ, பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியன், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் துரைவேலு, சாமில் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஐ.அந்தோணிசாமி, சங்க இணைச் செயலர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 100 சதவீத வரி உயர்வை மறுபரிசீலனை செய்து குறைக்க வலியுறுத்தி தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிப்பது, அரக்கோணம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை உடனடியாக நியமிக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.