தினமலர் 04.08.2010
நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை
காஞ்சிபுரம் : “காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என, நகராட்சி துணைத் தலைவர் சம்மந்தம் நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.மனுவில் அவர் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் ராஜேந்திரன், நான்கு ஆண்டுகளாக நகராட்சி சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். நகராட்சி விதிமுறைகளின்படி மன்றக் கூட்டத்தின் தீர்மானப் பொருட்களை வாசித்து கலந்தாலோசிக்க வேண்டும்.
ஆனால் வரிசை எண் சொல்லி ஆல்பாஸ் என்கிறார். ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 வரையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் 10 அல்லது 15 தீர்மானங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. மற்ற தீர்மானங்கள் காலாவதியாகும். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வளர்ச்சி குறைந்து வருகிறது.தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தால், தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்வதில்லை. நகராட்சியில் திருட்டுத்தனமாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணியாளருக்கு ஆதரவாக உள்ளார். குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. முதல் வார்டிலிருந்து 23வது வார்டு வரை குப்பைகளை அகற்ற தனியாருக்கு ஆறு லட்சம் ரூபாய் குத்தகை என்ற பெயரில் வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது. குத்தகை வரி, சொத்து வரி, கடை வரி போன்றவை, நீண்ட நாட்களாக வசூலிக்கப்படாமல் உள்ளன. மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது நிறுத்தப்படவில்லை. இவற்றுக்கு நகராட்சி தலைவரே பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளார். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சம்மந்தம் தெரிவித்தார்.