நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள கோரிக்கை
அரியலூர் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அரியலூர் வரி கொடுப்போர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, விஸ்தரிப்பு பகுதிகளிலும் வீடுகள் பெருகி வருகிறது. இதன்மூலம் நகராட்சிக்கு வருமானம் அதிகரித்துள்ளது. புதிதாக, நகர்ப்புற சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சியில் சுகாதார நிலை மோசமாக உள்ளது.
அனைத்து தெருக்களிலும் குப்பைகள் தேங்கியுள்ளது. மேலும், பெரியார் நகர் கீழ்புறம் கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. புதைசாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில், சாலைகளை சீரமைக்க வேண்டும்.
மாவட்ட மைய நூலகம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் வாசகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழு, பூச்சிகள் கலந்து வருவதை தவிர்க்க, நகராட்சி குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிமென்ட் ஆலைகளால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில், அந்தந்த துறைகள் மீது வரி கொடுப்போர் சங்கம் மூலம் வழக்கு தொடுக்கப்படும் என்றார் அவர்.