நகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் கேபிள் பதிக்க எதிர்ப்பு
தினமணி 27.09.2013
நகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் கேபிள் பதிக்க எதிர்ப்பு
விருதுநகர் நகராட்சி பகுதியில் தனியார் தொலைபேசி
நிறுவனத்தின் கேபிள் பதிக்கும் அனுமதிக்கு நகராட்சி உறுப்பினர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
விருதுநகர் நகராட்சி கூட்டம் புதன்கிழமை தலைவர் மா.சாந்தி தலைமையில்
நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மணி மற்றும் துணைத் தலைவர்
மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: 31ஆவது வார்டு பகுதியில் சுகாதார
வளாகத்தை சீரமைக்கவில்லை. இதனால், கொசு உற்பத்தி அதிகமாகி மக்கள்
அவதிப்படுகிறார்கள்.
பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் குண்டும்
குழியுமாகவே உள்ளன. இதனால் இப்பகுதியில் செல்லும் மாணவர்கள் மிகவும்
பாதிப்பு அடைகின்றனர்.
விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ளது.
இதனால் வாகன நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது.
எனவே சாலையை அகலப்படுத்த வேண்டும். அதேபோல், சாலை மத்தியில் மின்
கம்பங்கள் உள்ளன. அதை சாலையோரத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். தனியார்
அறக்கட்டளை நிர்வாகத்தால் எரிவாயு மயானம் பராமரிக்கப்படுகிறது. அதனால்,
இங்கு எரிக்கப்படும் சடலங்களின் விவரங்களை பதிவு செய்வதற்கு பதிவேடுகள்
பராமரிக்க வேண்டும். நகராட்சியில் தீர்மானம் வைக்கும் போது ஒப்பந்தம்
விடும் இனங்கள் குறித்து எண்ணங்கள் அடிப்படையில் விவரமாக குறிப்பிட்டிருக்க
வேண்டும்.
தனியார் தொலைபேசி நிறுவனத்தினர் சாலைகளில் கேபிள் பதிக்க
நகராட்சியின் அனுமதிக்கு வைத்திருந்தனர். இதற்கு, அனைத்து உறுப்பினர்களும்
எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி சாலைகள் கடந்த 15 ஆண்டுகளாகவே குண்டும்
குழியுமாக உள்ளன. அதையடுத்து, பாதாளச் சாக்கடை பணிகளால் முழுவதும்
தோண்டப்பட்டு சரிசெய்யப்படாமல் உள்ளன. இந்நிலையில் சாலையைத் தோண்டி
கேபிள் பதித்தால் மறுபடியும் குண்டும் குழியுமாக மாறும். இதற்கு பொதுமக்கள்
கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். நகராட்சிக்கு ரூ.2 லட்சத்தை செலுத்தி
விட்டு, ரூ.2 கோடி செலவு வைக்கும் கேபிள் பதிக்கும் திட்டத்துக்கு நகராட்சி
அனுமதி அளிக்கக் கூடாது என உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தலைவர் மா.சாந்தி பதிலளித்து பேசுகையில், 31ஆவது வார்டு பகுதியில் சுகாதார வளாகத்தை சீரமைக்க ஒப்பந்த பணிகள் விடப்பட்டுள்ளன.
பாதாளச் சாக்கடை பணிகள் முடிந்துள்ளன. சாலைகளில் சீரமைப்பு பணிகள்
இந்த வாரத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது. விருதுநகர்-அருப்புக்கோட்டை
சாலை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சாலைப்
பகுதிகளில் இடையூராக இருக்கும் மின்கம்பங்கள் அனைத்தும் ஓரப்பகுதியில்
வைக்கப்படும்.
இயற்கை எரிவாயு மயானம் தனியார் அமைப்பின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளது.
அதனால், அங்கு ஒவ்வொரு நாளும் எரிக்கப்படும் சடலங்கள் விவரம்
அனைத்தும் பதிவேடுகளில் பராமரித்து வரப்படும். அதன் அடிப்படையிலேயே இறப்பு
சான்றிதழும் வழங்கப்படும். தனியார் தொலைபேசி நிர்வாகத்தினர் கேபிள் பதிக்க
அனுமதி கேட்டிருந்தனர். அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லை என்பதால்
தீர்மானம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.