நகராட்சிக்கு வரும் குடிநீர் மாயம் கண்டுபிடிக்க தீவிர கண்காணிப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சிக்கு, பள்ளிபாளையம் அடுத்த, ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் இருந்து, ஒரு நிமிடத்துக்கு, பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது. அந்த தண்ணீர், திருச்செங்கோடு சந்தைப்பேட்டையை வந்தடையும்போது, 6,000 லிட்டராக குறைந்து விடுகிறது.
முழுமையான தண்ணீர் வந்து சேராததற்கான காரணத்தை, நகராட்சி அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. கோடைகாலத்தில், காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்படும் நீரை கொண்டே, நகராட்சி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தற்போது, 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிபாளையத்தை அடுத்த எஸ்.பி.பி., காலனி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஒரு குழாய் வால்வில் தண்ணீர் கசிவு ஏற்படுவது தெரிய வந்தது. அந்த இடத்துக்கு, நகராட்சி உதவி பொறியாளர் அம்சா தலைமையில் சென்ற நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, குழாயில் வித்தியாசமான வால்வு இருப்பதை கண்டுபிடித்தனர். தகவல் அறிந்த சேர்மன் சரஸ்வதி, கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அனுமதி இல்õமல் குடிநீரை உறிஞ்ச வால்வு போடப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
அந்த வால்வை பரிசோதனை செய்ததில், பம்ப் செய்யப்படும் தண்ணீர் திருப்பிச் செல்வதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள வால்வு என்பது தெரியவந்தது. அதனால், அப்பகுதியில் தண்ணீர் திருட்டு நடக்கவில்லை, என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், நிமிடத்துக்கு 3,000 லிட்டர் தண்ணீர் குறைவதால், அதற்õன காரணத்தை கண்டுபிடித்து, தடுக்க வேண்டுமென்று பணியாளர்கள் முடிக்கி விடப்பட்டுள்ளனர்.