தினமணி 03.05.2010
நகராட்சிப் பள்ளி தத்தெடுப்பு விழா
திருவாரூர், மே 2: திருவாரூர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் திருவாரூர் – விஜயபுரத்தில் அலிவலம் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியைத் தத்தெடுக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் கே. கலையரசன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் கே. ரத்தினவேலு முன்னிலை வகித்தார். திருவாரூர் நகர்மன்றத் தலைவர் கு. தென்னன், துணைத் தலைவர் ஆர். சங்கர், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் வி. பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
விழாவில் இப்பள்ளியை கிங்ஸ் ரோட்டரி சங்கம் தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்குச் சீருடைகள் வழங்கப்பட்டன. மேலும், இப்பள்ளிக்குத் தேவையான வசதிகள் சங்கம் சார்பில் செய்து தரப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ச. சவுந்தரராஜன், டேங்க் சிட்டி ரோட்டரி தலைவர் புலவர் மு. சந்திரசேகரன், சோழா ரோட்டரி தலைவர் பிறை. அறிவழகன், வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் வி.கே.எஸ். அருள், ரோட்டரி சங்கச் செயலர் ஏ.கே. குழந்தைவேலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.