தினமணி 04.05.2010
நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா போளூர் பேரூராட்சி?
திருவண்ணாமலை, மே 3:போளூர் பேரூராட்சியை மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை போளூர் மக்கள் 15 ஆண்டுகளாக தமிழக அரசுக்கு முன்வைத்து காத்திருக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக போளூர் உள்ளது. திருவண்ணாமலை–வேலூர் சாலையில் உள்ள போளூர் தற்போது பேரூராட்சியாக உள்ளது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி போளூரின் மக்கள் தொகை 25,505 பேர்.
போளூரில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றியம், 2 நீதிமன்றங்கள், மின்வாரியம், டிஎஸ்பி அலுவலகங்கள், 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
போளூரை சுற்றி வசூர், விளாங்குப்பம், காங்கேயனூர், வெண்மணி, தியாகபுத்தேரி, வில்வாரணி, தேவிகாபுரம், பொம்மனந்தல், படவேடு, சந்தவாசல், அத்திமூர் உள்ளிட்ட 40 கிராமங்கள் அமைந்துள்ளன.
ஜவ்வாது மலையில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் தங்கள் தேவைகளுக்கு போளூருக்கு வந்து செல்கின்றனர்.
பேரூராட்சியாக உள்ள போளூரில் தற்போது அடிப்படை வசதிகளான வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி ஆகியன மிகக் குறைவாகவே உள்ளன. பேரூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.1.5 கோடியை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட 4 நகராட்சிகளே உள்ளன. நகராட்சி அந்தஸ்தை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் போளூருக்கு உள்ளது.
அதையடுத்து போளூரை நகராட்சியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதியினர் அரசுக்கு முன்வைத்து 15 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி முன்னாள் தலைவர் கொ.பாண்டுரங்கன் கூறியது:
30 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை இருந்தாலே பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்ற அரசாணையின்படி கடந்த 2004-ம் ஆண்டே பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம்.
வரி வருவாயும் தேவையான அளவு உள்ளது. நகராட்சியாக மாறினால் அதிக நிதியுதவி பெற்று அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும் என்றார்.பேரூராட்சி செயல் அலுவலர் வாசுதேவன் கூறியது:
போளூர் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு தேவையான மக்கள் தொகை குறித்து கணக்கெடுப்புக்குப் பின்பு தான் தெரியவரும். விரைவில் தேர்வுநிலை பேரூராட்சியாக மாற்றப்படுவது உறுதி என்றார்.
போளூரில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்ப்பட்ட ஏ.ராஜேந்திரன் கூறியது: கடந்த 1991-ம் ஆண்டு முதலே போளூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரி வருகிறோம். இதுதொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் பலமுறை கோரிக்கை எழுப்பி உள்ளேன்.
பேரூராட்சியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையே 22 ஆயிரம் பேர். மக்கள் தொகை 45 ஆயிரத்தை கண்டிப்பாக தாண்டியிருக்கும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு போளூரை நகராட்சியாக மாற்றுவதற்கான மக்கள் தொகை அந்தஸ்தை பெற்றுதரும்.
போளூர் பேரூராட்சியை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே போளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.