தினமலர் 30.12.2010
நகராட்சியிடம் ஏரியை ஒப்படைத்தால் சுத்தமாகும் : ஊட்டி நகராட்சி கூட்டத்தில் கருத்து
ஊட்டி : “”ஊட்டி ஏரியை நகராட்சி வசம் ஒப்படைத்தால் சுத்தமாக பராமரிப்பதில் சிக்கல் இருக்காது,” என நகர மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், “ஊட்டி–மைசூர் சாலையில் பட்பயர் பகுதியில் 4,808 என்ற சர்வே எண்ணில் கட்டடம் கட்ட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது,’ என பல கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தலைவர் ராஜேந்திரன் பதிலளிக்கையில், “”நகர திட்ட அலுவலர் விடுப்பில் உள்ளதால் அவரிடம் விளக்கம் கேட்ட பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார். இதற்கு கவுன்சிலர்கள் சம்மதிக்காததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் நகரமன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக கூட்டத்தை தலைவர் ஒத்தி வைத்தார்.
மீண்டும் சிறிது நேரத்துக்கு பின் நடந்த கூட்டத்தின் விவாதம்: தலைவர் ராஜேந்திரன்: பட்பயர் கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட பிரச்னை தொடர்பாக நகர திட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும். அனுமதி உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை.
துணை தலைவர் ரவிக்குமார்: நகர திட்ட அலுவலகத்தில் தொடர் முறைகேடு நடந்து வருகிறது. விண்ணப்பதாரர்களை ஏன் நேரில் விசாரிக்க வேண்டும். 1500 சதுர அடி நிலப்பரப்புக்கு குறைவாக வீடு கட்ட அனுமதி கோருபவர்கள் 3 துறைகளிலும் அனுமதி பெற வேண்டும் என மக்களை வலியுறுத்துகின்றனர்.
தலைவர் ராஜேந்திரன்: 1500 அடி நிலப்பரப்புக்கு குறைவாக வீடு கட்ட அனுமதி கோரினால் புவியியல் துறையிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது. அவ்வாறு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
தம்பி இஸ்மாயில்: எனது வார்டில் தொடர்ந்து தெரு விளக்குகள் எரிவதில்லை. மேலும் கழிப்பிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளன. இது குறித்து பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
சம்பத்: எட்டினஸ் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மழைநீர் கால்வாய் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் பழுதடைந்தால் மழை நீர் சாலைக்கு வந்து விடும். மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை.
நகராட்சி பொறியாளர் ராமமூர்த்தி; தெரு விளக்குகளை பராமரித்து வருபவர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் சரி செய்யவில்லை என்றால் அவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
முஸ்தபா:கோடப்பமந்து கால்வாய் 80 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டது. ஓராண்டுக்குள் தற்போது இந்த கால்வாய் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் தூர்வார செலவிடப்பட்ட பணம் வீணாகியுள்ளது. இதனால் மழை காலத்தில் வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்து விடும். இந்த கால்வாய் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டால் அதை பராமரிக்க ஏதுவாக இருக்கும்.
தலைவர் ராஜேந்திரன்: ஊட்டி ஏரி மற்றும் கோடப்பமந்து கால்வாயை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. நகராட்சி வசம் ஏரி மற்றும் கோடப்பமந்து கால்வாய் ஒப்படைக்கப்பட்டால் அவற்றை பராமரிப்பது சுலபமாகும். மேலும் மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி பெற்று மேம்பாடுகள் பணிகள் மேற்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே நிதி வழங்கப்படுவதால் ஏரியை நகராட்சி வசம் ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
துணை தலைவர் ரவிகுமார்:ஊட்டி மார்க்கெட் மிகவும் அசுத்தமாகவும், பாதுகாப்பு இல்லாமலும் உள்ளது. மார்க்கெட்டின் நுழைவுவாயில்களை சீரமைக்க வேண்டும். மார்க்கெட் இருள் சூழ்ந்துள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 கடைகளில் திருட்டு நடந்துள்ளது.
இம்தியாஸ்: ஊட்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அருகில் பூமியை தோண்டி கட்டடம் கட்டி வருகிறார்கள். இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
தலைவர் ராஜேந்திரன்:நாய்கள் தொல்லையை கட்டுபடுத்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பூமியை தோண்டி கட்டடம் கட்டும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்வார்கள். இத்தகைய விவாதங்களுக்கு பிறகு நகரமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.