தினமலர் 30.06.2010
நகராட்சியில் கட்டட அனுமதி பெற கூடுதல் செலவு : இன்ஜினியர்கள் அசோசியேஷன் அதிருப்தி
பொள்ளாச்சி: “பொள்ளாச்சி நகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வாங்குவதற்கு பெரும் தொகை செலவழிக்க வேண் டியதுள்ளது‘ என சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி தாலுகா சிவில் இன்ஜினியர்ஸ் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பொள் ளாச்சி நகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி பெற முன்பணம் என்ற பெயரில், கட்டுமான பணிகள் நிறைவடையாமல், குடிநீர் இணைப்பிற்கும், பாதாள சாக்கடை திட்டத்திற்கும், காப்பு தொகைக்கும், மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கும் பணம் வசூலிக்கின்றனர். மேலும், நகராட்சியில் வசூலிக்கும் கட்டட உரிம கட்டணம், சேவை கட்டணம், அபிவிருத்தி கட்டணம் ஆகியவையும் உயர்த்தி வசூலிக்கின்றனர்.
கட்டண உயர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. கட்டட அனுமதி பெற்று வங்கியில் கடன் கொண்டு கட்டடம் கட்டும் மக்கள், அனுமதி பெறவே பெருந்தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது.ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியும், சுரங்க நடைபாதை கட்டும் பணியும் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலம் பணி மந்தமாக நடப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், ரோடு சரியில்லாமல் அடிக்கடி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகி செல்லத்துரை நன்றி கூறினார்