தினமணி 03.05.2010
நகராட்சியில் நிதி ஒதுக்கியும் சீரமைக்கப்படாத பாலம்
தஞ்சாவூர், மே 2: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு, திருவள்ளுவர் நகர் 9-வது தெருவில் ஒன்றரை ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வரும் கழிவுநீர் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து 6 மாதங்களாகியும் இதுவரை பணிகள தொடங்கப்படாதது அப்பகுதி மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ரோடு, அண்ணாநகர் பகுதியில் ஒன்று முதல் 20 தெருக்கள் உள்ளன. இவை நகராட்சியின் 47, 48, 49 ஆகிய வார்டுகளை உள்ளடக்கியது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்பகுதியில் வசிக்கின்றன. இதில் 49-வது வார்டுக்கு உள்பட்ட திருவள்ளுவர் நகர் 9-வது தெருவில் கழிவு நீர் வாய்க்கால் பாலம் உள்ளது. தெரு முனையில் சாலை தொடங்கும் பகுதியில் வாய்க்கால் இருப்பதால், கான்கிரீட் பலகைகளை அடுக்கி பாலம் போன்று வைத்துள்ளனர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதிலிருந்த இரண்டு சிமென்ட் பலகைகள் உடைந்துவிட்டன. இதனால், சாலை குறுகலாகி இரு சக்கர வாகன போக்குவரத்திற்கும், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் சிரமம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, சேதமடைந்த இடத்தில் வாய்க்கால் இடைவெளியில் இரு சக்கர வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். புதைச் சாக்கடை திட்டத்தால் உடைக்கப்பட்ட நகரின் சாலைகளை உலகத் தரத்தில் சீரமைக்க ரூ. 50 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைத்ததும் சீரமைப்புப் பணி தொடங்கும் என்று நகராட்சி நிர்வாகம் கூறிவந்தது.
ஆனால், காலம்கடந்து வந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த கே. பாபு என்பவர் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சாலையை சீரமைக்க மனு அளித்தார்.
இந்த மனுவிற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர், அடுத்த நிதியாண்டில் (2010-2011) அரசின் திட்டப் பணிகளில் முன்னுரிமை அளித்து பணி நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், குறுகிய அந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கியதில் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து மக்கள் மீண்டும் கோரிக்கை எழுப்ப, கடந்த 2009, நவம்பர் மாதம் 9-வது தெருவை சீரமைக்க ரூ. 80,000 நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எஸ். வெள்ளைச்சாமி (தி.மு.க) கூறியது:
சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கிய நிலையில், அண்ணாநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனுமதி கிடைத்து, பள்ளி மேம்பாட்டுப் பணிக்காக கல்வி வளர்ச்சி நிதியில் ரூ. 6 லட்சம் ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கூடப் பணிகள் முக்கியமென்பதால், அந்த வேலைகளை முதலில் தொடங்கினோம். சாலை சீரமைப்பு ஒப்பந்தத்தையும், பள்ளி வேலைகளைச் செய்யும் ஒப்பந்தக்காரர்தான் எடுத்துள்ளார். ஆள்கள் பற்றாக்குறை என்பதால் பள்ளி வேலைகளை முடித்துவிட்டு இன்னும் இரு மாதங்களில் சாலை சீரமைப்புப் பணிகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இதை ஏற்றுக்கொள்ளாத அப்பகுதி மக்கள், இன்னும் ஒரு மாதத்தில் சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.