தினமணி 04.01.2010
நகராட்சியில் முழுமை பெறும் நிலையில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம்
வெள்ளக்கோவில்,ஜன.3: “”வெள்ளக்கோவில் நகராட்சியில் தமிழக அரசின் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் முடிவு பெறும் நிலையில் உள்ளதாக,” மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட உள்ளரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் பேசியது:
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அனைவருக்கும், இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 200 பேருக்கு மட்டும் வழங்க வேண்டியுள்ளது.
திமுக ஆட்சியில் மக்களுக்குச் சொன்ன திட்டங்களைக் காட்டிலும், சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் அரிசிக்கு அலைந்த நிலை மாறி, தற்போது கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. கிலோ நெல் 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் தமிழக அரசு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்குகிறது. பிற மாநிலங்களிலிருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு நியாயமான விலையில் விநியோகிக்கப்படுகிறது.
கிராம மறுமலர்ச்சிக்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி போன்ற திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார்.
விழாவில், நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 313 பயனாளிகளுக்கு அடுப்பு வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கே.முரளீதரன் தலைமை வதித்தார். மாவட்ட விற்பனைக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கனகசபாபதி வாழ்த்துரை வழங்கினார்.திமுக நகர செயலாளர் எம்.எஸ்.மோகனசெல்வம்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.