தினமணி 12.01.2010
நகர்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடனுதவி
காஞ்சிபுரம், ஜன. 11: நகர்புற ஏழை மக்கள் மானிய வட்டியில் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் கடனுதவித் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை:
இத் திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும், மாத வருமானம் ரூ.3300-வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும், மாத வருமானம் ரூ.3301 முதல் ரூ.7300 வரை பெறும் நடுத்தர வருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சமும், நடுத்தர வருமான பிரிவினருக்கு ரூ.1.60 லட்சமும் கடனாக வழங்கப்படும். இக்கடன் தொகை தேசிய வங்கிகள் மூலம் பெற்றுத் தரப்படும். கடனை 15 முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திருப்பி செலுத்த வேண்டும். கூடுதலாக கடன் தொகை தேவைப்பட்டால் வழக்கமான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 (270 சதுர அடி) சதுர மீட்டர் பரப்பளவும், நடுத்த பிரிவினர் 40 சதுர மீட்டர் (430 சதுர அடி) இருக்க வேண்டும்.
தம்முடைய பெயரிலோ, தனது மனைவியின் பெயரிலோ (அல்லது) குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதற்குரிய பட்டா உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளவர்களும் இத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்கள் அறிய அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களை அணுகலாம். காஞ்சிபுரம் வட்டத்தில் வசிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன், தங்கள் மனைப்பட்டா நகல், வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று நகல்களுடன் வேலூர் வீட்டு வசதி பிரிவு நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மற்றவர்கள் சென்னை அடையாறு, அசோக் நகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய வணிக வளாக செயற்பொறியாளர் அலுவலர்களை அணுகலாம் என்றார்.