தினமணி 18.12.2009
நவீன தகன மேடையை பராமரிக்க அறக்கட்டளை
பண்ருட்டி,டிச.17: பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்தால் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை பராமரிப்பதற்காக ஆத்ம ஜோதி அறக்கட்டளை என்ற புதிய அறக்கட்டளை புதன்கிழமை அமைக்கப்பட்டது. ÷பண்ருட்டி நகர நிர்வாகத்தின் சார்பில் கும்பகோணம் சாலை கெடிலம் நதிக் கரையில் சுமார் ரூ.43 லட்சம் செலவில் நவீன் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.
÷மேலும் ரூ.25 லட்சம் செலவில் சிமென்ட் சாலை, சுற்றுச் சுவர், குளியலறையுடன் கூடிய கழிப்பறை, பூங்கா மற்றம் நீர் ஊற்று அமைக்கப்படவுள்ளது.
இந்த எரிவாயு தகன மேடையை சிறப்பான முறையில் அறக்கட்டளை மூலம் பராமரிக்க, அறக்கட்டளை அமைப்பதற்கான கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு ஆத்ம ஜோதி அறக்கட்டளை என பெயரிட்டனர்.
இந்த அறக்கட்டளையின் தலைவராக எஸ்.வி.ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.வைரக்கண்ணுவும், துணைத் தலைவர்களாக கே.என்.சி.மோகனகிருஷ்ணன், சபாபதி செட்டியார், டி.சண்முகம் செட்டியாரும், செயலராக திருவள்ளூவர் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆர்.சேரனும், பொருளராக நெய்வேலி கல்வி அறக்கட்டளை தலைவர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட இணை செயலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் ஆணையர் கே.உமாமகேஸ்வரி, பொறியாளர் சக்திவேல், நெய்வேலி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் எம்.நடராஜன், கால்நடை மருத்துவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.