தினமணி 12.09.2014
நவீன நகரங்களில் வை-ஃபை, தொலை மருத்துவ வசதிகள்
நவீன நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து வரும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அதற்கான வரைவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
அதில், சிறந்த போக்குவரத்து வசதி, அனைத்து வீடுகளுக்கும் கழிவுநீர் இணைப்பு வசதி, வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நவீன நகரங்களின் கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதற்காக, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில அமைச்சர்கள், மாநில முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நவீன நகரங்களுக்கான வரைவுத் திட்டம் இறுதி செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.