தினகரன் 29.11.2013
நாசரேத்-குரும்பூர் சாலை சீரமைப்புபணி துவக்கம்
நாசரேத், தினகரன் செய்தி எதிரொலியாக பலமாதங்களாக குண்டும் குழியுமாக கிடந்த நாசரேத் – குரும்பூர் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாசரேத் குரும்பூர் இடையே உள்ள ஓய்யான் குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, நெய்விளை, நாலுமாவடி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்பட்டது. இந்த வழியாக ஏரளமான பஸ்கள், லாரி கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகிறது. குறிப் பாக புன்னைநகர் வனதிருப்பதி கோயிலுக்கும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஜெபக்கூடாரத்துக்கும் மாதந்தோறும் ஏராளமான ஸ்பெஷல் பஸ்களும் வேன்களும் மற்றும் கார்களும் சென்று வருகிறார்கள்.
இந்த வழியாக செல்பவர்கள் சிரமப்பட்டனர். இந்த சாலையை விரைவில் சீரமைக்ககோரி கடந்த 24ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தன. இதன் எதிரொலியாக சாலையை அகலப்படுத்தி சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மூக்குப்பீறியில் இருந்தே ரோட்டின் இருபக்கத்திலும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தொண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து நாசரேத் காங்கிரஸ் சிறுபான்மைபிரிவு தலைவர் பீட்டர் கூறியதாவது: நாசரேத்-குரும்பூர் சாலை பல மாதங்களாக மோசமான நிலையில் கிடந்தன. இந்த வழியாக மோட்டார் சைக்கிள்களிலும், சைக்கிள்களிலும் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கடந்த 24 ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வந்த உடனே சாலைப்பணிகள் தொடங்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் இதுகுறித்து நாசரேத்தை சேர்ந்த ஆனந்தராஜ் கூறியதாவது, நாசரேத் குரும்பூர் இடையே சாலைப்பணி தொடங்கப்பட்டுள்ளது இதனை விரைவில் முடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.