தினகரன் 06.08.2010
நாற்கர சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்த ‘பார்க்கிங்’ வசதி கலெக்டர் தகவல்
வேலூர், ஆக.6: ‘விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நாற்கர சாலை ஓரத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்ய தனி இட வசதி செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்று கலெக்டர் தெரிவித்தார்.
வேலுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செ.ராஜேந்திரன் தலை மை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணவேல்ராஜ், எஸ்.பி. அன்பு, ஏடிஎஸ்பி பட்டாபி, வட்டார போக்குவரத்து அலுவலர் தரணி, மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் மற்றும் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாற்கர சாலையில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விபத்துகள் அதிகமாக ஏற்படும் பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் வாகனங்கள் சாலைகளில் நிறுத்திவைப்பதாலும் ஏராளமான விபத்துகள் நிகழ்கின்றன.
‘ஆறுவழிச் சாலை அமைந்தவுடன் 40 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு இடத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்து, டிரைவர்கள் ஓய்வு எடுக்க தனி இட வசதி ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என கலெக்டர் தெரிவித்தார். வேலூர் சி.எம்.சி. முன் உள்ள ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முழுமையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
‘மாவட்டத்தில் பட்டாசுகள், வெடி பொருட்கள் உரிய அனுமதி பெற்று இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா? சட்டரீதியான தேவை களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து வருவாய்த்துறை, காவல் துறையினர் இணை ந்து சோதனை நடத்த வேண்டும்’ என்று கலெக்டர் உத்தரவிட்டார்.