தினமலர் 12.08.2010
நியாயமான கட்டணத்தில் கூடுதல் குடிநீர்: அமைச்சர் உறுதி
திருப்பூர்: “”மூன்றாவது குடிநீர் திட்ட கலந்தாய்வு கூட்டம், வரும் 23ல் நடக்கிறது. அதன்பின், நியாயமான கட்டணத்தில் கூடுதல் குடிநீர் பெற்றுத்தர நடவடிக்கை மேற் கொள்ளப்படும்,” என நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
கணக்கம்பாளையம் ஊராட்சியில், சமுதாயக்கூட திறப்பு விழா, இலவச “டிவி‘ வழங்கும் விழா, திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவி லட்சுமி வரவேற்றார்.
நெடுஞ்சாலைத்துறை அமைச் சர் சாமிநாதன், சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து பேசியதாவது:தேர்தல் சமயத்தில் நம்ப முடியாத வகையில் இருந்த வாக்குறுதிகள் எல்லாமே இன்று திட்டங் களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழக அரசு, திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான அதிகாரிகளை விரைந்து நியமித்து வருகிறது. கோவை, ஈரோடு சென்று கொண்டிருந்த மக்கள், இன்று திருப்பூரிலேயே தேவையை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டட பராமரிப்பு பணியை விரைவாக செய்வதற்காக, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் பணியிடம் உருவாக்கப்படும். அதற்கான கோப்புகளை நிதித் துறை செயலர், முதல்வர் பார் வைக்கு அனுப்பியுள்ளார். அதேபோல், மாவட்ட நீதிமன்றங்களும் விரைவில் அமைக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், 99 சதவீத நிர்வாக பணிகள் நிறைவேறி விட்டன; விரைவில் 100 சதவீதமாக பூர்த்தி பெறும்.கணக்கம்பாளையம் ஊராட்சியில் 2,609 கார்டுகள் உள்ளன. அவற்றில், முதல் கட்டமாக 955 கார்டுகளுக்கு “டிவி‘ வழங்கப்பட்டு விட்டது. தற்போது, 1,654 பேருக்கு வழங்கும் பணி துவங்குகிறது.
திருப்பூரில் முதல்கட்டமாக வழங் கப்பட்டதை காட்டிலும், இரண் டாம் கட்டமாக வழங்கப்படும் “டிவி‘க்கள் எண்ணிக்கை ஒவ்வொரு பகுதிகளிலும் பல மடங்கு அதிகமாக உள்ளன.முக்கிய பிரச்னையாக இருப்பது குடிநீர். வரும் 23ல், சென்னையில் துணை முதல்வர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. அதன் பின், திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள நகராட்சிகளுக்கு மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலமாக, நியாயமான கட்டணத்தில் கூடுதல் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். நான்காவது குடிநீர் திட்ட ஆய்வுப்பணிகள் துவங்கிவிட்டன. அத்திட்டம் நிறைவேற் றப்படும் போது, திருப்பூரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.
கலெக்டர் சமயமூர்த்தி பேசும் போது, “”முதல்கட்டமாக, மாவட்ட அளவில் 4.70 லட்சம் “டிவி‘க்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 16 ஆயிரத்து 600 காஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 16 ஆயிரத்து 100 இணைப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு துவங்கியுள்ளது. காப்பீடு திட்டம் வாயிலாக, 5,942 பேர், 14.19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். வரும் 15ல் இருந்து குடிசை வீடுகளை கான்கிரீட் விடுகளாக தரம் உயர்த்தும் திட்ட பணிகள் துவங்குகின்றன,” என்றார்.எம்.எல்.ஏ., கோவிந்தசாமி,ஆர்.டி.ஓ., சொக்கன், தாசில்தார் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.