தினமலர் 09.12.2010
நிறுத்தி வைத்த ஊதியம் பட்டுவாடா நகராட்சி ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம், கடந்த ஒரு வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறித்து, “காலைக்கதிர்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, நேற்று மாலையே ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டதால், ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் நகராட்சியில் குடிநீர் வழங்கல், இன்ஜினியரிங் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றில் 70க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 130க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். அனைத்து ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 1ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு விடும். இம்மாதம் 7ம் தேதி ஆகியும் நவம்பர் மாதத்துக்கான ஊதியம் துப்புரவு பணியாளர்கள் நீங்கலாக, பிற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. வரி வசூலை காரணம்காட்டி ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் இந்நடவடிக்கையால் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து “காலைக்கதிர்’ நாளிதழில் விரிவான செய்தி நேற்று வெளியானது. அதையடுத்து, நேற்று மாலை நகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், நவம்பர் மாத ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டது. அதனால் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.