நில ஆவணங்களை இணைய வழியில் பராமரிக்க நடவடிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் நில ஆவணங்களை இணைய வழியில் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இணைய வழியில் நில ஆவணங்களை பராமரிப்பதற்குரிய மென் பொருளை முன்னோடித்திட்டமாக செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை செயல்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வட்டம் முன்னோடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஊத்தங்க ரை வட்டம் முன்னோடி வட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வட்டத்திலுள்ள கணினியில் பராமரிக்கப்படும் நில ஆவணத் தகவல் தொகுப்பினை, நடுவண் மூலக் கணினிக்கு பதிவேற்றம் செய்யும் முன்னர், தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் வண்ணம் மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே ஊத்தங்கரை வட்டத்தை சேர்ந்த நில உடமைதாரர்கள் தமது நில ஆவணங்களில் மாற்றம் செய்யவோ, பிழைகளை நீக்கம் செய்யவோ விரும்புவோர், தமது விண்ணப்பங்களை நில உரிமைப்பத்திரங்களின் நகல்களுடன் வரும் மே மாதம் 19ம் தேதி யோ அல்லது அதற்கு முன்னரோ சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., அல்லது ஊத்தங் கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.