நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது மாநகராட்சி கமிஷனர் அலறல்
திருச்சி: “மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்’ என, திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தற்போது நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், எதிர்கால சந்ததியினரின் தண்ணீர் தேவையை காத்திடும் பொருட்டு, ஒவ்வொரு கட்டிட உரிமையாளரும், தங்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் அரசு உத்தரவுப்படி, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே ஒவ்வொரு குடியிருப்பிலும் அமைத்துள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை, தற்போது புதுப்பித்து செயல்படும் விதத்தில் புனரமைப்பு செய்ய வேண்டும்.
புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கு முறையான வரைபடம் இல்லாமல், மாநகராட்சி மூலம் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
பழைய கட்டிடங்களில் வீடுகள் மற்றும் அனைத்து வகையான வணிக நிறுவன கட்டிடங்களிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால், மாநகராட்சி பணியாளர்கள் மூலம், சம்மந்தப்பட்ட கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்து, அதிரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாநகர மக்கள் சமூக அக்கறையுடன் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி, அதை நன்றாக செயல்படுத்த வேண்டும்.