தினமணி 22.01.2010
நிலுவை வரிகள்: வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை
மதுரை, ஜன. 21: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட கடைகளின் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பது தொடர்பாக, கடை வியாபாரிகள், சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
மாநகராட்சிக்கு உள்பட்ட கட்டடங்களில் வாடகை அடிப்படையில் உள்ள மீன் மார்க்கெட் கடைகள், இரும்புக் கடை, நகைப் பட்டறைகள், மரக்கடைகள், பஜார் கடைகள் உள்ளிட்டவற்றின் நிலுவைத் தொகை செலுத்துவது தொடர்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாநகராட்சி உதவிக் கமிஷனர் (வருவாய்) ரா. பாஸ்கரன் தலைமை வகித்தார்.
இதில், எழுத்தாணிக்காரத் தெரு, திலகர் திடல், சுப்பிரமணியபுரம், ராம்நகர், ஆர்.எம்.எஸ். சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடை வைத்திருப்போர் மற்றும் அவை சார்ந்த சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் 930 கடைகளைச் சேர்ந்தோர், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ. 40 லட்சம் வரியை, வரும் 31.1.2010}க்குள் செலுத்துவதாக உறுதியளித்தனர்.