தினமலர் 15.02.2010
நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில்கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
திசையன்விளை:நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் சுனாமி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் ஆய்வு செய்தார்.நெல்லை மாவட்டத்தில் உள்ள 113 சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கவதற்காக 26.68 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டம் நிறைவேற்றப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தின்படி முழுமையான தண்ணீர் தங்கள் ஊர் வாட்டர் டேங்க்களுக்கு வருவதில்லை எனவும், குடிநீர் பைப்புகளில் உடைப்புகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி பஞ்., தலைவர்கள் மாவட்ட கலெக்டரிடமும், அப்பாவு எம்.எல்.ஏ.,விடமும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளான இடையன்குடி, விமனங்குடி, கூடுதாழை, டாடா குடியிருப்பு, கூட்டப்பனை, கரைச்சுத்து உவரி, உவரி மற்றும் ஊர்களில் உள்ள குடிநீர் டேங்க்குகள், சம்புகள் ஆகியவற்றை நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமன், அப்பாவு எம்.எல்.ஏ., ஆகியோர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கடற்கரை கிராம மக்கள் தங்களது ஊர்களில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தினர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-“”நெல்லை மாவட்டத்தில் உள்ள 113 சுனாமி குடியிருப்பு ஊர்களுக்கு பாதுகாக்கப்பட்ட தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்காக கடந்த 2007ம் நவம்பர் மாதத்தில் தமிழக அரசு 26.68 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்பொழுது முடிவடையும் தருவாயில் உள்ளதாக இங்கு வருகை புரிந்துள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.நானும், அப்பாவு எம்.எல்.ஏ.,வும் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் உட்பட அத்தனை அலுவலர்களும் காலை முதல் இந்த 113 குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதா? சென்றுள்ளதா? என்பதை பார்வையிட்டு வருகிறோம்.உவரியில் பார்வையிடும் போது இந்த பகுதிக்கு அந்த தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை. அதற்கான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருகிறோம். மேலும் சில கிராமங்களில் மேடான பகுதிக்கு சம்ப் அமைத்தும் தண்ணீர் சென்றடையவில்லை. அதற்கான மீட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தாமிரபரணி தண்ணீர் வரவில்லை என்று மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அதனை முழுமையாக ஆய்வு செய்து அத்தனை கிராமங்களுக்கும் திட்ட மதிப்பீட்டின்படி தண்ணீர்வர நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறோம். மிகப்பெரிய மீனவ கிராமங்களான உவரி, இடிந்தகரை, கூந்தன்குழி ஆகிய பகுதிகளுக்கு தூண்டில் வளைவு வேண்டும் என்றும் அவ்வாறு அமைந்தால் தான் மீன்பிடி தொழிலை செய்ய முடியும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இன்று இங்கு வந்துள்ள மீன்வளத்துறை இணை இயக்குநர், உதவி செயற் பொறியாளர்கள், பொதுப்பணி துறையினர் ஆகியோரை அழைத்து ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார் செய்ய அறிவுரை வழங்கியுள்ளேன். அதன்பிறகு அரசுக்கு அனுப்பி முறையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.நிகழ்ச்சியில் உவரியில் கலெக்டர் ஆய்வு செய்தபோது பஞ்.,தலைவர் அந்தோணி, “எங்கள் ஊருக்கு சுனாமி கூட்டு குடிநீர் ஒரு சொட்டு கூட வரவில்லை‘ என புகார் கூறினார். இதனையடுத்து கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ., அப்பாவு அங்கு சென்று பார்வையிட்டு அதிகாரிகளை கண்டித்தனர்.நிகழ்ச்சியில் ரைமண்ட், ராயர், ராய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.