தினமலர் 23.04.2010
நேரு பூங்காவை பராமரிக்கும் விவகாரத்தில்…எழுதி தர எதிர்பார்ப்பு!: நடவடிக்கை எடுத்தால் பொலிவாகும் பூங்கா
கோத்தகிரி: கோத்தகிரி நேரு பூங்காவை, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், எழுத்துப் பூர்வமாக தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைத்தால் மட்டுமே, மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், குன்னூர் சிம்ஸ்பார்க் உட்பட சுற்றுலா ஸ்தலங்களை காணும் சுற்றுலாப் பயணிகள் பலர், கோத்தகிரி கோடநாடு, நேரு பூங்காவை காணத் தவறுவதில்லை. கோத்தகிரியில் இதமான காலநிலை நிலவுவதால், இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களை காண வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. நகரின் மையப்பகுதியில் 3 ஏக்கர் பரப்பில் உள்ள நேரு பூங்கா, கோத்தகிரி பேரூராட்சியின் பராமரிப்பில் இருந்து வந்தது. நிதி நெருக்கடி உட்பட பல காரணங்களால், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பூங்காவை சரிவர பராமரிக்க முடியாத நிலையில், முட்புதர் சூழ்ந்து, சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியது. கடந்த காலங்களில் இப்பூங்காவில், 10க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூங்காவை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், 1996ம் ஆண்டு, தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பொலிவிழந்து காட்சியளித்த நேரு பூங்காவுக்கு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் தோட்டக்கலைத் துறை உட்பட பல திட்டங்களின் கீழ் போதிய நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், அலங்கார நுழைவு வாயில் மற்றும் வேலி, ‘இன்டர்லாக் பிளாக்‘ நடைபாதை, நிழற்குடை, இருக்கைகள், ரோஜா மேடை என பல வகைகளில், பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சி நடத்துவது போல, கோத்தகிரி நேரு பூங்காவுக்கும் சிறப்பு அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக ‘காய்கறி கண்காட்சி‘ நடத்தி அமர்க்களப்படுத்தியது தோட்டக்கலைத் துறை. கண்காட்சி நாட்களில், உள்ளூர் மக்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். நடப்பாண்டு மே 29, 30ம் தேதிகளில் மூன்றாவது காய்கறி கண்காட்சிக்கு பூங்கா தயார்படுத்தப்பட்டு வருகிறது. பூங்காவை மேலும் மெருகூட்ட தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் வாய்மொழியாக மட்டுமே, தோட்டக்கலைத் துறையிடம் பூங்காவை ஒப்படைத்துள்ளதால், பூங்காவை மேலும் மேம்படுத்தும் தோட்டக்கலைத் துறையின் முயற்சிக்கு, அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி தடைபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நேரு பூங்காவை மேம்படுத்த, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், எழுத்துப் பூர்வமாக, தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைத்தால் மட்டுமே, போதிய நிதி பெற முடியும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.