பசுமலை உணவகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை: காலாவதியான உணவுப் பொருள் பறிமுதல்
பசுமலையில் தனியார் உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருள்களை புதன்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி நகர்நல அலுவலர் யசோதாமணி தலைமையில் அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதில் குளிர்சாதனப் பெட்டியில் காலாவதியான உணவுப் பொருள்களை வைத்திருந்ததாகக் கூறி அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, நகர்நல அலுவலர் கூறுகையில்: இந்த உணவகத்தில் காலையில் சாப்பிட்ட ஒருவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆணையர் உத்தரவின்பேரில் இந்த உணவகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஏற்கெனவே சமைத்த உணவுப் பொருள்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், முறையாக சுத்தம் செய்யப்படாத இறைச்சி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தோம். மேலும் இந்த உணவகத்துக்கான உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை. அதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இதுபோல தரமில்லாத, காலாவதியான உணவுப் பொருள்களை நுகர்வோருக்கு விற்கும் உணவகங்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய 0452-2530521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் ரத்தினகுமார், வீரன். சங்கரப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.