தினகரன் 28.01.2011
பட்டுக்கோட்டையில் ரூ. 2 கோடியில் சாலைப்பணி நகராட்சி கூட்டத்தில் முடிவு
பட்டுக்கோட்டை ஜன.28:
பட்டுக்கோட்டையில் ரூ. 2 கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்வதென நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சி அவசர கூட்டம் தலைவர் பிரியா இளங்கோ தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையர் (பொ) ராமலிங்கம், துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு; பானுமதி (தி.மு.க):
இலவச கியாஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் வழங்க வேண்டும். ஆனால் 3 மாதமாகியும் கிடைக்கவில்லை என்றார்.
தலைவர் : இதுபற்றி சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.
சாமிநாதன் (காங்): பெரிய கடைத்தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் சாலை அமைக்க வேண்டும். மார்க்கெட் ரோட்டை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்றார். ஸ்ரீதர் (தி.மு.க) : ஏழை, எளிய மக்களிடம் நெருக்கடி கொடுத்து வரி வசூலிக்கிறார்கள். ஆனால் வசதி படைத்தவர்கள் செலுத்தாமல் இருந்தாலும் அவர்களிடம் வசூல் செய்யப்போவதில்லை என்றார்.
சீத்தாலட்சுமி (அ.தி.மு.க) : 1வது வார்டில் புதிய வீடுகளுக்கு வரி விதிக்கப்படாததால் மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறமுடியவில்லை.எனவே வரி விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
ஜோதிமணி (அ.தி.மு.க) : எனது வார்டில் கழிவுநீர் வடிகால் கட்டவேண்டும் என்றார்.
சீனிஅண்ணாதுரை (தி.மு.க) : பட்டுக்கோட்டையில் மொழிப்போர்தியாகி அழகிரிசாமிக்கு மணிமண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர், துணைமுதல்வர், முயற்சிகள் மேற்கொண்ட மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். செல்லநாகராஜன் (அ.தி.மு.க) : போக்குவரத்து நிறைந்த சாலைகளை தடுத்து பொதுக்கூட்டங்கள் நடத்துவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அண்ணா அரங்கில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நாடிமுத்து (காங்) : அறந்தாங்கி சாலையில் டிரான்ஸ்பார்மருக்கு அடியில் தண்ணீர் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நகராட்சி துணைத்தலைவர் கண்ணன் : திருமணமண்டபம், ஹோட்டல்களில் எச்சில் இலைகள் கொட்டுவதற்கு நகராட்சி வசதி செய்து கொடுக்க வேண்டும். நகராட்சி காந்திபூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது. இதேபோல் கவுன்சிலர்கள் வீரையன், கைலாஷ்குமார், கோவி.ரவி ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் இயற்கை இடர்பாடு வடகிழக்கு பருவமழை நிரந்தர நிவாரண நிதியின் கீழ் நகரில் ரூ.2 கோடியில் மெண்ட் சாலை, தார்ச்சாலை அமைப்பது. மேலும் நகராட்சி பொது நிதியிலிருந்து 80 லட்சம் செலவில் மழைநீர் வடிகால், அங்கன்வாடி, சுடுகாட்டு கொட்டகை, தெருவிளக்கு, சிமெண்ட் சாலை, தார்ச்சாலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.