பணிக் காலத்தில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி
பணிக் காலத்தில் மரணமடைந்தவர்களின் வாரிசுகள் 17 பேருக்கு கருணை அடிப்படையில் பணி உத்தரவுகளை கோவை மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி திங்கள்கிழமை வழங்கினார்.
பதிவுரு எழுத்தர் 1, அலுவலக உதவியாளர் 2, தேர்ச்சித் திறனற்ற பணியாளர் 2, துப்புரவுப் பணியாளர் 12 பேர் என மொத்தம் 17 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி உத்தரவும், ஒருவருக்கு நகர சுகாதார செவிலியருக்கான உத்தரவும் வழங்கப்பட்டன.
கோவை மாநகராட்சியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மாநகர பொறியாளர் ஜி.கருணாகரன், தெற்கு மண்டல உதவிப் பொறியாளர் ஆர்.பத்மா, துப்புரவுப் பணியாளர் மயிலாத்தாள், மேற்கு மண்டல துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ், மத்திய மண்டல அலுவலக உதவியாளர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் மார்ச் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர்களுக்கு பணிப் பலன்களை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க.லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, நியமனக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், மண்டலத் தலைவர் கே.ஏ.ஆதிநாராயணன், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர் ஆர்.பிரபாகரன், பணிகள் குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், மாமன்ற உறுப்பினர் கே.ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.