பணிபுரியும் இடங்களில் பாலியல் பலாத்கார தடுப்பு: மசோதா நிறைவேறியது
பணிபுரியும் இடங்களில் பாலியல் பலாத்காரத் தடுப்பு மசோதா, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதைத் தடுப்பதற்கான இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறிவிட்டது. இதன் ஷரத்துகளை மீறுவோருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், தொழில் செய்வதற்கான உரிமம் அல்லது பதிவு ரத்து ஆகிய நடவடிக்கைகள் எடுக்கவும் இது வழிவகுக்கிறது. இம்மசோதாவை மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது. இது கண்டிப்புடன் அமலாக்கப்படுவதைத் தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் உறுதியளித்தார்.
இப்புதிய சட்டத்தின் கீழ், வீட்டு வேலை செய்யும் பெண்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களும் கொண்டுவரப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.