பயன்பாட்டிற்கு வரும் முன்பே பாதாள சாக்கடை குழாயில் பழுது நீக்கும் பணி
விழுப்புரத்தில், பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்களில், சிலவற்றில் இருந்த அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி வரும் 2009-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது இதில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுப்பப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய கீழ்பெரும்பாக்கம் எருமனந்தாங்கல் பகுதியிலும், காகுப்பம் பகுதியிலும் இரு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் நீர் காகுப்பம் ஏரியில் விடப்பட உள்ளது.
பணிகள் முழுமையாக முடிவடையாததால் இன்னும் வீடுகளில் இருந்து கழிவுநீர் இந்த பாதாள சாக்கடை குழாய் வழியாக அனுப்பப்படவில்லை. இந் நிலையில் இந்த பாதாளச் சாக்கடையில் உள்ள அடைப்புகள் சரி செய்வதற்காக அமைக்கப்பட பகுதிகளை திடீரென்று தொழிலாளர்கள் திறந்து சரி செய்தனர்.
நாபாளையத் தெரு, சங்கரமடம் தெரு ஆகிய இடங்களில் இப் பணிகள் நடைபெற்றன. கழிவுநீர் அனுப்பப்படுவதற்குள் என்ன அடைப்பு ஏற்பட்டது என்பது புரியாமல் அப் பகுதி பொதுமக்கள் குழப்பம் தெரிவித்தனர். இதற்குள் அடைப்பு ஏற்பட்டால், கழிவு நீர் செல்லும்போது என்ன ஆகும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து நகராட்சி பொறியாளர் பார்த்திபனிடம் கேட்டபோது பாதாள சாக்கடை இன்னும் நகராட்சியிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. நகராட்சியிடம் ஒப்படைக்கும்போது சுத்தமாக ஒப்படைக்க வேண்டும். அதில் தண்ணீர் விட்டு சோதிக்க வேண்டும். வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும்போது குழாய்களுக்குள் மணல் மற்றும் கலவைத் துகள்கள் விழுந்திருக்கும். அதனை சரி செய்திருப்பார்கள் என்றார்.