தினகரன் 06.09.2010
பராமரிப்பின்றி கிடக்கும் காரைக்குடி நகராட்சி பூங்கா
காரைக்குடி, செப்.6: காரைக்குடி நகராட்சி பூங்கா சரிவர பராமரிக்கப்படாததால் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இவ்விஷயத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் தலையிட்டு விரைவில் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி பாரம்பரிய சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இப்பகுதியின் அருகில் உள்ள செட்டிநாடு பங்களா, ஆத்தங்குடி பங்களாக்கள் பழங்கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. குன்றக்குடி ,பிள்ளையார்பட்டி போன்ற கோயில்களில் தரிசனம் செய்வதற்கும் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். மேலும் இங்குள்ள பல்கலைக்கழகம், பொறியியல் கல்லு£ரி, மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் என பல்வேறு கல்வி நிறுவனங்களில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர்.
காரைக்குடியில் மக்கள் மாலைநேரங்களில் தங்களது குழந்தைகளுடன் பொழுதுபோக்குவதற்காக பூங்காக்கள் உள்ளன. ஆனால், போதிய பராமரிப்பில்லாததால் அருணாநகர், சுப்பரமணியபுரம் ஆகிய பகுதியில் உள்ள பூங்காகளில் உள்ள சிறுவர் விளையாட்டு பலகைகள், சறுக்குமரம் என அனைத்தும் உருக்குலைந்து பயனற்று கிடக்கின்றன.
இதுகுறித்து பாஜ மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் சபரிநாதன் கூறுகையில். ‘‘காரைக்குடி நகராட்சி சார்பில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சுமார் ரூ.ஒரு கோடியில் பூங்கா அமைக்கப்படுகிறது. சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாட எந்தஒரு உபகரணமும் இல்லை. பூங்கா திறந்துஇருக்கும் நேரத்தில் சமூகவிரோத கும்பல் புகுந்து மது குடிக்கின்றனர். அருணா நகரில் உள்ள பூங்கா புதர்மண்டி கிடக்கிறது. இவ்விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு பூங்காக்களை பராமரிக்க வேண்டும்,’’ என்றார்.