தினமலர் 03.05.2010
பரிசோதிக்கப்பட்ட குடிநீரா… சிறுநீரகம் பாதிக்கும் அபாயம்
அரக்கோணம் : அரக்கோணம் நகராட்சியில் வழங்கப்படும் குடிநீரால், சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக வார்டு கவுன்சிலர்கள், நகராட்சியில் புகார் செய்துள்ளனர்.
அரக்கோணத்தில் வழங்கப்படும் குடிநீரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை சென்னையில் பரிசோதனை செய்து, சான்று பெற்ற பிறகே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இந்த சான்றுகளை பெறாமல், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருவதாக புகார்கள் வந்துள்ளன. ஆனால், நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று வருடமாக இதற்கான சான்றுகள் பெறாமல் குடிநீர் வழங்கி வருவதால், பொதுமக்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக வார்டு கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அரக்கோணம் நகராட்சித் தலைவராக விஜயராணி கன்னையன் இருந்து வருகிறார். இவர் தி.மு.க.,வை சேர்ந்தவர். நகராட்சிகளில் உள்ள வார்டுகளில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் சுத்தமானதாக வழங்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., வார்டு கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை ஆறு மாதத்திற்கு சென்னையில் பரிசோதனை செய்து, தரச்சான்று பெற வேண்டும்.
ஆனால், நகராட்சியில் குடிநீர் பரிசோதனை செய்யாமல் வினியோகம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் துரை சீனிவாசன், நகராட்சியில் புகார் செய்துள்ளார். நகராட்சி நிர்வாகம் சுத்தமான குடிநீர் வழங்கி வருவதாக பதிலளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் தரச்சான்று பெற்று உள்ளதோ, இல்லையோ, குடிநீரால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.