தினமணி 21.05.2010
பலத்த மழை: பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர், மே 20: லைலா புயலால் கடந்த இரு தினங்களாக தமிழக, ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் பெய்த கன மழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பூண்டி ஏரி. இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர் இணைப்புக் கால்வாய் மற்றும் மழலைக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
கோடை காலம் என்பதால் 34.5 அடியாக இருந்த பூண்டி நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. 17-ம் தேதி காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 27.55 அடி தண்ணீர் இருந்தது.
இந்நிலையில் லைலா புயல் சின்னம் உருவாகி அதன் காரணமாக 18, 19-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 27.70 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா கால்வாயில் மழையின் காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 243 கன அடி நீர்வரத்து உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் எல்லையோரப் பகுதியில் மழை நீடித்தால் கிருஷ்ணா கால்வாய் வழியாக நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கனிசமாக உயரும் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில்: அம்பத்தூர் 143, பொன்னேரி 167, சோழவரம் 130, கும்மிடிப்பூண்டி 156, செம்பரம்பாக்கம் 65, பள்ளிப்பட்டு 51, பூந்தமல்லி 62, பூண்டி 86, தாமரைப்பாக்கம் 108, திருத்தணி 73, திருவள்ளூர் 90, ஊத்துக்கோட்டை 93.