தினமணி 12.11.2009
பல்லாவரத்தில் தினமும் குடிநீர்
தாம்பரம், நவ. 11: பல்லாவரத்தில் தினமும் குடிநீர் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன் கூறினார்.சென்னை பல்லாவரத்தில் புதன்கிழமை, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியது:
பல்லாவரம் பகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, கூடுதலாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் பல்லாவரத்தில் தினமும் குடிநீர் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு இதுவரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 373 பேருக்கு குடும்ப புகைப்படம் எடுக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,290 கிராமங்களில் 1,110 கிராமங்களில் புகைப்படம் எடுக்கும் பணி முடிவடைந்துள்ளது.
இந்த காப்பீட்டுத் திட்டம் மூலம் சுமார் ஒரு கோடி குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்றார் தா.மோ.அன்பரசன்.
மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் எஸ்.பழனி, பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி, ரெஜினா இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் வி. செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.