தினத்தந்தி 30.07.2013
பல்லாவரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை மீட்க தீவிர நடவடிக்கை நகராட்சித் தலைவர் உறுதி
நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சித் தலைவர்
நிசார் அகமது தெரிவித்தார்.
நகராட்சி கூட்டம்
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி கூட்டம் தலைவர் கே.எம்.ஆர்.நிசார்
அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி,
துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், பொறியாளர் சீனிவாசன், நகரமைப்பு அலுவலர் மாறன்,
வருவாய் அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகளும், கவுன்சிலர்களும் கலந்து
கொண்டனர்.
பூங்கா ஆக்கிரமிப்பு
கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் பதிஈசன், ‘‘பல்லாவரம்
நகராட்சிக்கு சொந்தமான சிறுவர்பூங்கா அஸ்தினாபுரம் சிவகாமி நகர் 2–வது
தெருவில் தனியார் ஆக்கிரமிப்பின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பாக
மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக பல்லாவரம் நகராட்சி
நகரமைப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல்
ஏதாவது காரணம் கூறி காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில்
நகரமமைப்பு அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனபோக்கோடு நடந்தால் முதல்–அமைச்சரின்
தனிப்பிரிவில் புகார் செய்வேன்’’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த நகராட்சி தலைவர் நிசார் அகமது, ‘‘பல்லாவரம் நகராட்சி
பகுதிகளில் பல இடங்களில் பழைய லேஅவுட்களில் நகராட்சிக்கு வழங்கப்பட்ட
இடங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது
தொடர்பாக நகரமைப்பு பிரிவு அதிகாரிகள். கவுன்சிலர்கள் கலந்தாய்வு கூட்டம்
நடத்தப்படும்’’ என்றார்.
கொசு உற்பத்தி
தி.மு.க. உறுப்பினர் தனசேகரன் பேசும்போது, மழைக்காலத்தில் கொசு உற்பத்தி
அதிகமாக இருப்பதால் தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை தீவிரமாக
செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ரூ.25 லட்சம் செலவில் சுபம் நகர் பூங்காவையும், ரூ.10
லட்சம் செலவில் பி.பி.ஆர் நகர் பூங்காவையும் அபிவிருத்தி பணிகள் செய்வது
உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.