தினமணி 19.11.2010
பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்சிவகாசி, நவ. 18: சிவகாசியில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு நகராட்சி சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு 100 மீட்டருக்கு உள்பட்ட தூரத்தில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது.
இந் நிலையில், சிவகாசியில் பள்ளிகளின் அருகே உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகாசி நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை கடைகளில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில், பள்ளி அருகே உள்ள 7 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் 7 கடைக்காரர்களுக்கும் தலா ரூ. 200 அபராதம் விதித்தனர்.