தினமணி 08.11.2010
பள்ளிகளிடை வாலிபால்: மாநகராட்சிப் பள்ளி முதலிடம்
கோவை, நவ. 7: நீலம்பூர் கதிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் கோவை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்தனர்.
கதிர் கல்லூரியில் கலை, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. 36 பள்ளிகளில் இருந்து ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப் போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹெபாசிட் இயகோகா நிறுவன நிர்வாக இயக்குநர் என்.சுப்பிரமணியம் பரிசுகளை வழங்கிப் பேசினார். கல்லூரி தாளாளர் இ.எஸ்.கதிர், செயலர் லாவண்யா கதிர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்:
வாலிபால் மாணவர்கள் பிரிவில் முதலிடம் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி, 2ம் இடம் சிஆர்ஆர் மேல்நிலைப் பள்ளி, 3ம் இடம் மணி மேல்நிலைப் பள்ளி. மாணவியர் பிரிவில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. சின்னதடாகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பிஎஸ்ஜிஜி கன்யா குருகுலம் பள்ளி முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
அறிவியல் கண்காட்சியில் பத்மாவதி அம்மாள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. கன்யா குருகுலம் பள்ளி 2ம் இடத்தையும், சாந்தி மெட்ரிக் பள்ளி 3ம் இடத்தையும் பிடித்தது. விநாடி வினா போட்டியில் முதலிடம் லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 2ம் இடம் பிஎஸ்ஜி சர்வஜன மேல்நிலைப் பள்ளி.
இதேபோல, தமிழ்–ஆங்கிலம் பேச்சு, கட்டுரைப் போட்டிகள், பாட்டு, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.