தினமலர் 06.05.2010
பள்ளிபாளையத்தில் புதிய தாலுகா: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
பள்ளிபாளையம்: ‘திருச்செங்கோடு தாலுகாவை இரண்டாக பிரித்து பள்ளிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும்‘ என, நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு: தண்டபானி (தி.மு.க.,): எனது வார்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்க வேண்டும்.
சேர்மன் குமார்: அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க முடியுமா என ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சுப்ரமணி (அ.தி.மு.க.,): 16வது வார்டில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. காவரி ஆற்றில் மோட்டார் வைத்து நேரடியாக தண்ணீர் வழங்க வேண்டும்.
சேர்மன்: காவிரியில் மோட்டார் வைப்பது பாதுகாப்பு இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மோட்டாரை திருடி செல்லும் நிலை உள்ளது. தனியாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அறிவழகன் (தி.மு.க.,): எனது வார்டில் பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ளது. சேர்மன்: ஒப்பந்ததாரர்கள் குறைவாக இருப்பதால்தான் தாமதம் ஏற்படுகிறது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுப்ரமணி (அ.தி.மு.க.,): திருச்செங்கோட்டை இரண்டாக பிரித்து குமாரபாளையத்தை சட்டமன்ற தொகுதியாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் திருச்செங்கோடு தாலுகாவை இரண்டாக பிரித்து பள்ளிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்மன்: தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ரங்கசாமி (அ.தி.மு.க.,): பள்ளிபாளையம் பகுதியில் மனநலம் குன்றிய பலர் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். அவர்களை மீட்டு மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சேர்மன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. துணைச் சேர்மன் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் துரைசாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.