தினகரன் 01.06.2010
பழநி நகர் மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை: நகராட்சி கூட்டத்தில் முடிவு
பழநி, ஜுன் 1: பழநி நகர் பொதுமக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்வதென நகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பழநி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ஹக்கீம், பொறியா ளர் முத்து மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:
முஜீப்தீன்: நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு&பொருந்தலாறு அணைகளின் நீர்மட்டம் எவ்வாறு உள்ளது? மின் மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும்?
தலைவர்: போதிய அளவு தண்ணீர் உள்ளது. ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும்.
கந்தசாமி: லட்சுமிபுரம் பகுதியில் உள்ள குடிநீர்த்தொட்டிக்கு கோடைகால நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டது ஏன். ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?
தலைவர்: உள்நோக்கம் ஏதும் இல்லை. தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாகுல்அமீது: பழநி அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் இல்லாததால் சிகிச்சை குறைபாடு காரணமாக நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
தலைவர்: இது குறித்து அரசிடம் வலியுறுத்தப்படும். தலைக்காயத்திற்கு தனிப்பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலுமணி: பஸ் ஸ்டாண் டில் கல்வெட்டு வைக்க காலதாமதம் செய்வது ஏன்?
தலைவர்: அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளுக்கான கல்வெட்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செந்தில்: தனியார் பள்ளிகளுக்கு வரி விதிப்பு செய்ய வேண்டும். மேலும் கூடுதல் கட்டிடங்கள் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யவேண்டும்.
தலைவர்: அரசாணைப்படி நிர்வாக அனுமதி பெற்று வரிவிதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகேஸ்வரி: 31வது வார்டு பகுதியில் கோயில் கட்டும் பிரச்னை என்ன ஆனது.
தலைவர்: ஆர்டிஓ விசாரணையில் உள்ளது.
சுந்தர்: பழநி&கொடைக்கானல் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டம் என்ன ஆனது.
தலைவர்: வருவாய் அமைச்சர் கூறியதுபோல் பழநி கோயில் நிர்வாகத்திடம் இருந்து நிதியை மானியமாக பெற்று 2 நகராட்சிகள் இணைந்த இத்திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
குணசேகரன்: மராமத்து செய்யப்பட்ட ஆடு அடிச்சாலை பயன்பாடின்றி உள்ளது.
தலைவர்: இது குறித்து ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கார்த்திகேயன்: கொடைக்கானல் சாலையில் உள்ள தனியார் மினரல் தண்ணீர் நிறுவனம் அதிகமான அளவு நீரை உறிஞ்சுகின்றனர்.
தலைவர்: ஆணையர் தலைமையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜலிங்கம்: காந்தி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தலைவர்: ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.