பஸ் நிலையம் சுத்தம் செய்யும் பணி
பழனி நகராட்சி சார்பில், பஸ் நிலையங்கள் புதன்கிழமை கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனிக்கு தினமும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனியில் உள்ள வ.உ.சி. பஸ் நிலையம் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் இரண்டிலும், பயணிகள் மற்றும் பொதுமக்களால் ஏற்படுத்தப்படும் அசுத்தத்தால், சுகாதாரக் கேடு பரவுகிறது.
இதில், விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் ஐ.எஸ்.ஓ. தரம் வாய்ந்தது. இந்நிலையில், நகராட்சி ஆணையர், நகர்மன்றத் தலைவர் ஆகியோர் உத்தரவின்பேரில், பஸ் நிலையங்களில் இருந்த குப்பைகள் புதன்கிழமை இரவு அகற்றப்பட்டது.
தொடர்ந்து, லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பீய்ச்சி அடிக்கப்பட்டு பஸ் நிலையம் கழுவி விடப்பட்டது. கொசுக்களை அழிக்கும் விதமாக அல்லத்ரீன் கலந்த மருந்தும் போகிங் இயந்திரங்கள் மூலம் அடிக்கப்பட்டது.
பழனியில் குடியிருக்கும் மக்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், பஸ் நிலையத்தை நகராட்சி நிர்வாகம் கழுவிவிட்டது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும் பக்தர்கள், பயணிகள் நகராட்சி செயலுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.