தினத்தந்தி 21.10.2013
பாண்டிபஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகள் இன்று அகற்றப்படுகிறது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னை ஐகோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்ததைதொடர்ந்து, சென்னை
பாண்டிபஜார்–உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை கடைகள் இன்று(திங்கட்கிழமை)
அகற்றப்படுகிறது. நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி
உள்ளது.
ஐகோர்ட்டு தீர்ப்பு
சென்னை பாண்டி பஜார்–உஸ்மான் சாலையில் நடைபாதையில் வியாபாரம் செய்யும்
வியாபாரிகளுக்கு என்று சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4 கோடியே 30 லட்சம்
செலவில் கீழ்தளத்துடன் கூடிய 3 அடுக்கு வணிக வளாகம் 2010–ம் ஆண்டு
திறக்கப்பட்டது. வணிக வளாகத்தில் ஒரு கடை அமைக்க 5–க்கு 5 அடி வீதம் 628
கடைகள் அமைப்பதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியது.எனினும் வணிக வளாகம்
திறக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும், பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை
வியாபாரிகள் தொடர்ந்து நடைபாதைகளிலேயே கடைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை வியாபாரிகள் அக்டோபர்
20–ந்தேதிக்குள்(நேற்றுடன்) கடைகளை காலி செய்துவிட்டு, மாநகராட்சி நடைபாதை
வியாபாரிகளுக்கான வணிக வளாகத்துக்கு செல்ல வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு
கடந்த 11–ந்தேதி காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கியது.
அதிகாரிகள் எச்சரிக்கை
ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து மாநகராட்சி வணிக வளாகத்தில் கடைகளை
அமைக்கும் பணியில் வியாபாரிகள் இரவு–பகலாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும்
நேற்று வரை வெறும் 100–க்கும் குறைவான கடைகளே அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐகோர்ட்டு வழங்கிய காலக்கெடு நேற்று இரவுடன்
நிறைவடைந்ததைதொடர்ந்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் சென்னை பாண்டி
பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை வியாபாரிகளிடம் இன்று(திங்கட்கிழமை) காலை 7
மணிக்குள் கடைகளை காலி செய்து விட வேண்டும். இல்லையென்றால் கடைகளும்,
பொருட்களும் அகற்றப்படும் என்று எச்சரித்து சென்றுள்ளனர்.628 கடைகளுக்கு
தற்போது வெறும் 100–க்கும் குறைவான கடைகளே தயார் நிலையில் உள்ளது. எனவே
நடைபாதை வியாபாரிகள் இன்றுடன் தங்கள் கடைகளை காலி செய்வார்களா? என்பதில்
சந்தேகமே நிலவுகிறது.
மேயரை சந்திக்க முடிவு
இதுகுறித்து பாண்டி பஜார் நடைபாதை வியாபாரிகள் கூறுகையில், ‘வணிக
வளாகத்தில் இன்னும் கடைகளை அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 வாரங்களாவது
தேவைப்படும். மேலும் தீபாவளி வியாபாரமும் மும்முரமாக
நடைபெற்றுகொண்டிருப்பதால், கடைகளை காலி செய்ய மனம் இல்லாமல் இருந்து
வருகிறோம்.எனவே தீபாவளி பண்டிகை முடியும் வரையிலாவது நடைபாதையில் கடைகளை
வைக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு
செய்யலாமா? என்ற எண்ணத்திலும் இருந்து வருகிறோம்.இதுதொடர்பாக சென்னை
மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை இன்று(திங்கட்கிழமை)சந்திந்து கோரிக்கை
வைக்கவும் முடிவு செய்து இருக்கிறோம்.’ என்றனர்.