பாதாளச் சாக்கடைத் திட்டம்: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிந்தவுடன் அனைத்துப் பகுதியிலும் தரமான சாலைகள் அமைக்கப்படும். அதனால் பணிகளை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆர்த்தி தியேட்டர் சாலை பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையடைந்து விட்டன. இதனை அடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தாமதமாக நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. சாலை அமைக்கும் பணிகளை நகர்மன்றத் தலைவர் மருதராஜ் திங்கள்கிழமை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
பாதாளச் சாக்கடைத் திட்டத்தினை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பணிகள் முடிவடைந்த இடங்களில், தார்ச் சாலை அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெறும்.
பொதுமக்களும் போராட்டத்தைத் தவிர்த்து, நகராட்சி நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையர் டி.குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் துளசிராம், பொறியாளர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் தனபாலன், சோனா சுருளிவேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.