தினமலர் 08.09.210
பார்க்கிங் பகுதி தனியாருக்கு மட்டுமா? போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை: “பொது பார்க்கிங் பகுதியை, முழுக்க தனியாருக்கு என ஒதுக்கீடு செய்வது சட்டவிரோதமானது. பொது மக்கள் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தும் பகுதியை தனியார் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‘ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமணி என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னையில் உள்ள முக்கியமான ஓட்டல்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை சாலையோரங்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் பயன்படுத்துகின்றன. வெளியாட்களை“பார்க்கிங்‘ செய்ய அனுமதிப்பதில்லை. அதற்கென தனியாக பாதுகாப்பு ஊழியர்களை நியமித்து, கயிறு கட்டிக் கொண்டு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால், சாலை ஓரங்களில் பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை.
எனவே, பொது சாலையை ஆக்கிரமிக்கும் மேற்கண்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்‘ விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுடலைக்கண்ணு, மாநகராட்சி சார்பில் வக்கீல் பிரகாசம், போலீஸ் தரப்பில் அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகினர். “முதல் பெஞ்ச்‘ பிறப்பித்த உத்தரவு:
கட்டணம் செலுத்தி “பார்க்கிங்‘ செய்யும் பகுதியை, எந்த அடிப்படையில் தங்களுக்கு மட்டுமான “பார்க்கிங்‘ பகுதி என தனியார் ஒதுக்கிக் கொள்கின்றனர் என புரியவில்லை. மாநகராட்சி கட்டணத்தை வசூலித்தாலும், அந்தப் பகுதியை தங்களுக்காக மட்டும் தனியார் ஒதுக்கிக் கொள்ள உரிமையில்லை. மோட்டார் வாகன விதிகளைப் பார்க்கும் போது, பொது மக்களுக்கான “பார்க்கிங்‘ பகுதியில் தங்கள் வாகனங்களை மட்டுமே நிறுத்த தனியார் யாரும் உரிமை கோர முடியாது. விதிகளில் அவ்வாறு எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. தனியாரிடம் இருந்து உரிமக் கட்டணத்தை வசூலித்துக் கொண்டு, பொது பார்க்கிங் பகுதியை அவர்களுக்கு என ஒதுக்குவது சட்ட விரோதமானது. எனவே, கட்டணம் செலுத்தி பொது மக்கள் பார்க்கிங் செய்யும் பகுதியை, அவர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் போலீசார், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பொது “பார்க்கிங்‘ பகுதியை தனியாருக்கு மட்டுமே என ஒதுக்கீடு செய்யாமல், பொது மக்கள் பயன்படுத்தும் விதத்தில் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு “முதல் பெஞ்ச்‘ உத்தரவிட்டுள்ளது