பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற இடைத்தரகர்களை அணுகாதீர்!
மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற இடைத்தரகர்களை அணுக வேண்டாம், என மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி தினமும் 200 முதல் 300 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இதில், ஏறத்தாழ 50 விண்ணப்பங்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்படாமலும், தாய்-தந்தை பெயர் மாற்றம், பிறந்த தேதியில் மாறுபாடு ஆகிய காரணங்களுக்கான சான்றிதழ்கள் இணைக்கப்படாமல் உள்ளன. இத்தகைய விண்ணப்பங்களைத் தவிர்த்து, ஏனைய விண்ணப்பங்களுக்கு சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டு, உடனடியாக அன்றைய தினம் மாலையே தொடர்புடைய சுகாதார ஆய்வாளரின் கையொப்பம் பெறப்பட்டு வழங்கப்படுகிறது.
பிறப்புச் சான்றிதழ் உடனுக்குடன் ஆன்-லைன் மூலமும் பெற்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பெற வரும் பொதுமக்கள் தாங்களாகவே நேரடியாக தகவல் மையத்தில் உரிய விண்ணப்பத்தைப் பெற்று, முறையாகப் பூர்த்தி செய்து சான்றிதழ்கள் பெறலாம்.
இதற்காக, இடைத்தரகர்களை அணுகத் தேவையில்லை. பிறப்பு, இறப்புச் சான்று பெற வரும்போது இடைத்தரகர்கள் யாரேனும் அணுகினால், அது குறித்து தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் தெரிவித்துள்ளார்.