தினமணி 19.04.2010
பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம்
போடி, ஏப். 18: போடி நகராட்சியில் திங்கள்கிழமை பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் கூறியதாவது:
போடி நகராட்சியில், சமீப காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த மருத்துவமனைக்கே சென்று விவரம் சேகரித்து, 24 மணி நேரத்தில் இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், பலரும் பயன் பெற்றனர். மேலும், பிறப்பு இறப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் அவசியமாகும். அவர்களுக்கு உதவும் வகையில், நகராட்சி வளாகத்தில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இதில், பிறப்பினைப் பதிவு செய்த 5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். மேலும், பிறக்கும்போது பல குழந்தைகளுக்குப் பெயர் வைக்காமல், பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும். அதுபோன்ற குழந்தைகள் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கி, உடனடியாக பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
பிறப்புச் சான்றிதழ் தற்போது பள்ளிகளில் சேர்ப்பதற்கும், பாஸ்போர்ட் போன்றவை பெறுவதற்கும் கட்டாயம் தேவை. மேலும், பிறப்பு பதிவு செய்ய வேண்டியது சட்டப்படி அவசியமாகும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் பிறப்பினை கட்டாயம் பதிவு செய்து பயன் பெறவேண்டும் என்றார்.