தினமணி 30.09.2009
பில்லூர் குடிநீர் விநியோகப் பகுதிகளின் பிரச்னையைத் தீர்க்க மாநகராட்சி நடவடிக்கை
கோவை, செப்.29: பில்லூர் குடிநீர் விநியோகப் பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்துக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
ஆளுங்கட்சித் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம், எதிர்க்கட்சித் தலைவர் வெ.ந.உதயகுமார், கட்சிக் குழுத் தலைவர்கள் பி.ராஜ்குமார் (அதிமுக),கே.புருஷோத்தமன் (சிபிஐ), சி.பத்மநாபன் (சிபிஎம்)மற்றும் மண்டலத் தலைவர்கள்,மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு மண்டலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்னை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் ஒரே மாதிரி குடிநீர் விநியோகம் இருக்க வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து பேசிய ஆணையர் அன்சுல் மிஸ்ரா குடிநீர் விநியோக முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றும் குறித்து விளக்கினார்.
பழைய சிறுவாணி குடிநீர் விநியோகப் பகுதிகளான சித்தாபுதூர் பகுதி 18, 19, 20, 29-வது வார்டுகள், டவுன்ஹால் பகுதி 12, 13, 39, 40, 23 மற்றும் 24-வது வார்டுகளின் சில பகுதிகள், கணபதி பகுதியில் 70, 71-வது வார்டுகளுக்கு மீண்டும் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவாணி திட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது 4 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குறிப்பிட்ட வார்டுகளுக்கு பில்லூர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் அப் பகுதிகளுக்கு சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்வதால் கிடைக்கும் பில்லூர் குடிநீரை பற்றாக்குறை உள்ள கிழக்கு மற்றும் வடக்கு மண்டல வார்டுகளுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒண்டிப்புதூர், எச்ஐஎச்எஸ் காலனி பகுதிகளில் இருக்கும் விநியோகக் குழாயை கூடுதல் அளவு குடிநீர் கொண்டு வரும் வகையில் மாற்றி அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டங்களின் மூலம் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் பெறப்படுகிறது.
சிறுவாணி அணையில் இருந்து நாளொன்றுக்கு 80 மில்லியன் லிட்டர், பில்லூர் திட்டத்தில் 65 மில்லியன் லிட்டர் கிடைக்கிறது.