தினமலர் 03.02.2010
பிளாட்பார கடைகளை முறைப்படுத்த உத்தரவு
சிவகங்கை: பிளாட்பார கடை வைத்திருப்போரிடம் வரி வசூல் செய்ய, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. ரோட்டோரம், பிளாட்பாரங்களில் அதிகளவில் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இவர்களுக்கு வரி, வாடகை உள்ளிட்ட பிரச்னைகள் இல்லை. இக்கடைகளில் சுகாதாரமற்ற தின்பண்டங்கள் விற்கப்படுவதோடு, போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.
கணக்கெடுப்பு: ரோட்டோர கடைக்காரர்கள், பகலில் வியாபாரம் செய்து விட்டு, தள்ளு வண்டி, டிரை சைக்கிள்களை, அங்கேயே விட்டு செல்கின்றனர். சில அசம்பாவிதங்கள் நிகழும் போது, கடை வைத்திருப்போர் பற்றிய விபரம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ரோட்டோர கடைகளை முறைப்படுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி, இக்கடைகள் குறித்து கணக்கெடுக்கவும், வரிவிதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வியாபாரிகளிடம் வருமானம், நிலையான முகவரி போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும். செருப்பு, துணி போன்றவை விற்போருக்கு, வரி விதிக்கப்படவுள்ளது. இடையூறாக உள்ள தள்ளு வண்டிகள் குறித்தும் கணக்கெடுக்கப்படும் என்றார்.
ஆக்கிரமிப்பு பெருகும்: ரோட்டோர கடைகளை, அரசு முறைப்படுத்தினால், வரி செலுத்துகிறோம் என்ற உரிமையில், புதிய புதிய ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகும். அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமே ஒழிய, முறைப்படுத்த கூடாது.